தேனியில் பூக்கள் விலை மீண்டும் உயர்வு

தேனியில் பூக்கள் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனியில் பூக்கள் விலை மீண்டும் உயர்வு
Published on: 

தேனி:

தேனி மாவட்டத்தில் சீலையம்பட்டி, கோட்டூர், பூமலைக்குண்டு, தர்மாபுரி, தப்புக்குண்டு, கொடுவிலார்பட்டி, போடி, ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் பூக்கள் சாகுபடி நடந்து வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் தேனி, ஆண்டிப்பட்டி, சீலையம்பட்டி பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டுகளுக்கும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கடந்த வாரம் பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகை ரூ.250-க்கும், முல்லைப்பூ ரூ.250 முதல் ரூ.300 வரையும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் குறைந்தது. இதற்கிடையே பூக்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக பூக்கள் வரத்து குறைந்தது. சாகுபடி குறைந்து, விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். தற்போது மீண்டும் விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகை, சாதிப்பூ, முல்லைப்பூ தலா ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், செண்டுப்பூ, கொழுந்து, மருகு தலா ரூ.50-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.20-க்கும், கோழிக்கொண்டை, ரோஜா தலா ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா உள்பட மாவட்டத்தில் பல கோவில்களில் சித்திரை திருவிழா நடக்க உள்ளதால் பூக்கள் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாக பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

X