கால்நடைகளுக்கு தீவனமாகும் கருகிய பயிர்கள்

மானாமதுரை வட்டார பகுதியில் வறட்சி காரணமாக கருகிய பயிர்களை கால்நடைகள் தீவனத்திற்காக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
கால்நடைகளுக்கு தீவனமாகும் கருகிய பயிர்கள்
Published on

கருகிய பயிர்கள்

மானாமதுரை வட்டாரத்தில் சுமார் 8 ஆயிரம் எக்டேரில் நெல் நடவு செய்யப்படுவது வழக்கம். இப்பகுதியில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையை நம்பி நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாததால் விவசாயிகள் வேதனையில் இருந்தனர். மேலும் இவ்வாண்டு தொடக்கத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் நெல் நடவு செய்தனர். மானாமதுரை வட்டாரத்தில் இடைக்காட்டூர், முத்தனேந்தல், பெருமச்சேரி, கட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் பம்புசெட் மூலம் நெல் நடவு பணிகள் நடைபெற்றது. ஆனால் அதன்பின்பு பருவமழை கைக்கொடுக்காததால் வறட்சி நிலவியது. இதனால் ஏராளமான இடங்களில் பயிர்கள் கருகின. தொடக்கத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் கடன் வாங்கி நெல் பயிரிட்டனர். தொடர்ந்து மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி பயிர்கள் கருகியதால், வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். பயிர்கள் கருகி வருவது குறித்து வருவாய்த்துறையினர், வேளாண்மை துறையிடம் புகார் கொடுத்தும் இதுவரை யாரும் ஆய்விற்கு வரவில்லை.

கருகிய பயிர்களை கண்டு பெரும்பாலான விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். மேலும் கருகிய பயிர்களை கால்நடை வளர்ப்பவர்களுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

ஆய்வு செய்யவில்லை

அய்யனார்குளத்தை சேர்ந்த விவசாயி கருப்புசாமி கூறும்போது, நகையை அடமானம் வைத்து நெல் நடவு செய்தோம். தொடர்ந்து மழை இல்லாததால் பயிர்கள் கருகின. இதுவரை 5 ஆண்டுகளாக விளைச்சல் இன்றி கடனாளியாகி வருகிறோம். நன்கு விளைச்சல் கண்டால் வைக்கோல்களை வியாபாரிகள் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்து வாங்கிச்செல்வார்கள். விளைச்சல் இல்லாததால் ஏக்கருக்கு ரூ.1,000 கொடுத்து கால்நடை வளர்ப்பவர்கள் வாங்கி செல்கின்றனர். அவர்களும் அறுப்பு கூலி கொடுக்கக்கூட பணம் இல்லாமல் அவர்களே வயல்களில் இறங்கி காய்ந்த பயிர்களை அறுத்து செல்கின்றனர். வறட்சி பாதித்த பகுதிகளை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அனுப்பி, நிவாரண நிதியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் தெ.புதுக்கோட்டை, வேதியரேந்தல் பகுதிகளில் வருவாய்த்துறையினர் இதுவரை ஆய்விற்கு வரவில்லை. பலமுறை விவசாயிகள் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை. வேறு வழியின்றி விவசாயிகள் காய்ந்த பயிர்களை கால்நடைகளின் தீவனத்திற்காக குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com