தமிழகத்தில் மூடப்படுகிற 500 மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் சி.ஐ.டி.யு. சம்மேளனம் வலியுறுத்தல்

தமிழகத்தில் மூடப்படுகிற 500 மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் மூடப்படுகிற 500 மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் சி.ஐ.டி.யு. சம்மேளனம் வலியுறுத்தல்
Published on

டாஸ்மாக் ஊழியர்கள் பாதிப்பு

சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர் சம்மேளன மாநிலக்குழு உறுப்பினர் கோபால், திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்த போது, 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. பின்னர் அவற்றில் பணியாற்றிய ஊழியர்கள், பிற மதுக்கடைகளில் காலியாக உள்ள பணியிடத்திற்கு மாற்றப்பட்டனர். அதிலும் சிலருக்கு இன்னும் முறையான பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த மதுக்கடைகள் மூடப்படும் போது அவற்றில் பணியாற்றும் 2 ஆயிரத்து 500 ஊழியர்கள் வேலையிழக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஊழியர்கள் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். இதனை தடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்.

அரசு காலிப்பணியிடங்களில்...

இதேபோல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளும் விரைவில் மூடப்படும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, மூடப்படும் மதுக்கடைகளால் டாஸ்மாக் ஊழியர்கள் வேலையிழப்பதை அரசு தடுக்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இதற்காக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களில், டாஸ்மாக் ஊழியர்களை நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் 27-ந்தேதி மாநாடு நடைபெற இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com