உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு மாவட்டத்துக்கு ரூ.1,006 கோடி முதலீடு மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு ரூ.1,006 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தெரிவித்தார்.
உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு மாவட்டத்துக்கு ரூ.1,006 கோடி முதலீடு மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
Published on: 

சேலம்,

தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019 நடைபெறுவதை முன்னிட்டு சேலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்த சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ராஜா, வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழில் முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தை தொழில் வளம் மிக்க மாவட்டமாக மாற்றும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. தொழில் தொடங்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் பல்வேறு துறைகளின் அனைத்து உரிமங்கள் மற்றும் வரைபட ஒப்புதல் ஆகியவை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை 43 நபர்களுக்கு வங்கிகளால் கடன் தொகை வழங்கப்பட்டு அவற்றில் ரூ.1 கோடியே 25 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்தால் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் சிட்கோ மூலமாக மேட்டூர் மற்றும் வீரபாண்டியில் உள்ள தொழிற்பேட்டைகளில் சணல் பை தயாரிப்பு ஊக்குவிக்கப்பட்டு அது சம்பந்தமான உற்பத்தி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மரவள்ளிக்கிழங்கு மற்றும் மக்காச்சோளத்தை மூலப்பொருளாக கொண்டும், எளிதில் மக்கும் பைகள் தயாரிக்க தேவையான தொழில்நுட்பம் பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழில்களான ஜவுளித் தொழில், விசைத்தறி, ஆட்டோ லூம்ஸ், ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக் கிழங்கு மாவு தயாரித்தல், உணவு பதப்படுத்துதல் மற்றும் மாட்டுத் தீவனங்கள் தயாரித்தல், பாக்கு மட்டை மற்றும் காகித பை, இரும்பு மற்றும் எக்கு தளவாட சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள், மின் மற்றும் மின்னணு பொருட்கள், ரசாயன பொருட்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, வெள்ளி கொலுசுகள் மற்றும் அலங்கார ஆபரணங்கள் ஆகிய தொழில்கள் தொடங்க முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ன் கீழ் சேலம் மாவட்டத்திற்கு ரூ.1,000 கோடி முதலீடுகள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் இலக்கிற்கு மேலாகவே ரூ.1,006.64 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் திட்ட அறிக்கையினை தயாரித்தல், பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவிகளை பெற்றுத் தருதல், அரசு மானியங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் உணவுப்பதப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தொழில் முதலீட்டாளர்கள் அரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தொழில் முதலீட்டாளர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் வழங்கினார். இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட தொழில் மைய இணை இயக்குனர் ராமச்சந்திரன், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க துணை தலைவர் மாரியப்பன், மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் பிரசன்ன பாலமுருகன், சிட்கோ கிளை மேலாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X