

டி.என்.பாளையம் அருகே மர்ம விலங்கு நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆடுகள்- கோழி சாவு
டி.என்.பாளையத்தை அடுத்த நஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு கடித்ததில் சரவணன் வளர்த்து வந்த 4 ஆடுகள் மற்றும் 1 கோழி ஆகியவை செத்தன.
இதுபற்றி அறிந்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகள் மற்றும் கோழியை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தெரு நாய்கள் கடித்ததாலேயே ஆடுகள் மற்றும் கோழி இறந்ததாக, தெரிவித்தனா.
மர்ம விலங்கு நடமாட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் மர்ம விலங்கு ஒன்று நடமாடுவதை பொதுமக்கள் கண்டனர். இதனால் பீதியடைந்த பொதுமக்கள், இதுபற்றி மீண்டும் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மர்ம விலங்கின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத்தொடாந்து மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க நஞ்சை புளியம்பட்டியில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இந்த கண்காணிப்பு கேமராக்களின் மூலம் மர்ம விலங்கின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
மர்ம விலங்கு தென்பட்ட பகுதியானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டி.என்.பாளையம் வன எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி ஆகும். மேலும் பவானி ஆற்றின் கரையோரமாக இந்த கிராமம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.