அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி: எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் நண்பர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி: எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் நண்பர் கைது
Published on

சேலம்,

ரூ.17 லட்சம் மோசடி

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். என்ஜினீயரான இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்த ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்த மணி மற்றும் அவருடைய நண்பரான செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 49) ஆகியோர் ரூ.17 லட்சம் மோசடி செய்து விட்டதாக கூறி இருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணி, செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே கடந்த மாதம் மணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த செல்வகுமாரை போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன் தலைமையிலான 3 தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொண்டலாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வகுமார் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் நேற்று அதிகாலை கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பதுங்கி இருந்த செல்வகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி செல்வகுமாரும், எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியும் சேர்ந்து பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளனர். இதில் சிலருக்கு பணத்தை அவர்கள் திரும்ப கொடுத்து விட்டனர். மேலும் அவர்கள் தமிழ்செல்வனிடம் வாங்கிய பணம் கொடுக்க வேண்டி உள்ளது என்றனர்.

கொரோனா பரிசோதனை

இதையடுத்து கைதான செல்வகுமாரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முன்னதாக அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com