பெங்களூருவில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

பெங்களூருவில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் கடத்திய 106 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை
Published on

கோவை,

பெங்களூருவில் இருந்து கோவைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு கடைகள், குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து கோவைக்கு ஒரு ஆம்னி பஸ்சில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவை நவஇந்தியா, ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரி சிக்னல், ஆவாரம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் பணியாளர்கள் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தினர்

அப்போது பெங்களூருவில் இருந்து கோவை வந்த ஆம்னி பஸ் மேற்கூரையில் காய்கறி மூட்டைகளுக்கு நடுவே 3 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி பஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

ரகசிய தகவலின் அடிப்படையில் ஆம்னி பஸ்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 106 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆம்னி பஸ் டிரைவர் ரகுபதி (வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தினாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com