புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு 3 மணி நேரத்தில் வந்த கல்லீரல்

புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு 3 மணி நேரத்தில் வந்த கல்லீரலை அப்பல்லோவில் சிகிச்சை பெறும் ஒரு முதியவருக்கு டாக்டர்கள் பொருத்தினர்.
புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு 3 மணி நேரத்தில் வந்த கல்லீரல்
Published on

மாற்றுக் கல்லீரல்

சென்னையை சேர்ந்தவர் பாலன் (வயது 60). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது கல்லீரல் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி மாற்றுக் கல்லீரல் தேவை பற்றி முக்கிய மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் மூளைச்சாவு அடைந்ததாகவும், அவனது கல்லீரலை தானம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

3 மணி நேரம்

இதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்தன. சிறுவனின் கல்லீரல் அகற்றப்பட்டு, பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்து நேற்று காலை 10.40 மணிக்கு புதுச்சேரி மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டது. கல்லீரலுடன் புறப்பட்ட ஆம்புலன்ஸ் திண்டிவனம், திருச்சி வழியாக மதுரை நோக்கி வந்தது. வழியில் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் சாலைகளில் அந்தந்த மாவட்ட போக்குவரத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக, ஆம்புலன்ஸ் 3 மணி நேரத்தில், மதுரை அப்பல்லோ மருத்துவமனையை வந்தடைந்தது. உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையின் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த்கத்தர் தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் பாலனுக்கு அறுவை சிகிச்சை செய்து, கல்லீரலை பொருத்தினர்.

அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஒத்துழைப்பு

போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்ததால் தான் 3 மணி நேரத்தில் புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு வர முடிந்ததாகவும், கடந்த முறையை விட தற்போது அரைமணி நேரத்திற்கு முன்னதாக மதுரை வந்ததாகவும் டிரைவர் பார்த்திபன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com