

தளவாய்புரம்,
ராஜபாளையம் அருகே ஆதரவற்ற பெண்ணுக்கு நிதியுதவியை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. நேரில் வழங்கினர்.
ஆதரவற்ற பெண்
ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் மேட்டுப்பட்டி மந்தை தெருவை சேர்ந்தவர் குரு பாக்கியம் (வயது 38). இவரது கணவர் கனகராஜ் (44). இவர்களுக்கு சுரேஷ் (14) என்ற மகனும், மகாலட்சுமி (8) என்ற மகளும் உள்ளனர்.
குரு பாக்கியம் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் கனகராஜ் இவரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியூர் சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் குரு பாக்கியம் வேலை பார்த்து தனது குழந்தைகளை படிக்க வைத்து வந்தார். தற்போது நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
இதையறிந்த சேத்தூர் ஈன்றவர் உள்ளம் அறக்கட்டளை அவர்களால் முடிந்த உதவியை செய்தது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
எம்.எல்.ஏ. நிதியுதவி
இதுகுறித்து தகவல் அறிந்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. சேத்தூரில் உள்ள குருபாக்கியத்தின் வீட்டிற்கு நேரில் சென்று நிதி உதவி, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண உதவிகள், ரூ.10,000 ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது அவருக்கு தவையான உதவிகளை செய்து தருவதாக கூறினார். அப்போது மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், செயலாளர் சிங்கம்புலி அண்ணாவி, பாஸ்கர், நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் உத்தரவு
அதேபோல கலெக்டர் மேகநாதரெட்டி குரு பாக்கியம் வீட்டுக்கு நேரடியாக சென்று அவருக்கு தனது நிதியிலிருந்து ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கி, உடனடியாக அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்யவும், புதிய குடும்ப அட்டை வழங்கவும், மாதாந்திர உதவித்தொகை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து குரு பாக்கியம் கூறியதாவது:-
எனது குடும்ப சூழ்நிலையை அறிந்து முதலில் சேத்தூர் ஈன்றவர் உள்ளம் அறக்கட்டளை அவர்களால் முடிந்த உதவியை செய்தார்கள். தற்போது கலெக்டர் மேகநாதரெட்டி, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் நிதி உதவி வழங்கி உள்ளனர். அத்துடன் எனது குழந்தைகள் ஆன்லைன் மூலம் படிக்க செல்போனை கலெக்டர் வழங்கியதுடன், எனக்கு மருத்துவ உதவி செய்யவும், புதிய குடும்ப அட்டை வழங்கவும், மாதாந்திர உதவித்தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். எனக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனைவருக்கும் எனது நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.