

ஊட்டி,
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில், டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி கூடுதல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து கல்லூரி மாணவிகளிடம் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு மாவட்ட முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவமாணவிகள் கிராமங்களுக்கு சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.
ஒவ்வொரு வீட்டுக்கும் கல்லூரி மாணவிகள் செல்லும்போது எதற்காக வந்துள்ளார்கள்? என்ற கேள்வி பொதுமக்களுக்கு எழும். அப்போது தான் பொதுமக்களுக்கு டெங்கு மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படும். நீலகிரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என்றாலும், மாவட்டத்தை தூய்மையாக வைத்து, எந்தவித கொசுக்களும் உற்பத்தி ஆகாமல் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேரணி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பிங்கர்போஸ்ட் பஸ் நிறுத்தம் வரை சென்றது. அதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் 40 குழுக்களாக பிரிந்து பட்பயர், ஆர்.சி. காலனி, பெரியார் காலனி, தோப்பன்லைன், ஹவுசிங் யூனிட், சுல்தான்பேட்டை, திரைசா காலனி, ரோகினி தியேட்டர், கருப்புமண்வளை ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.