அரசு பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியல்

கோழியூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசு பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியல்
Published on

சாலை மறியல்

திட்டக்குடி அருகே கோழியூரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இதுவரை இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் கோடங்குடியில் இருந்து அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலையை சீரமைக்கவேண்டும்

இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், கோழியூரில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து, இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும், சேதமடைந்த நிலையில் காணப்படும் கோடங்குடி சாலையை சீரமைக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், திட்டக்குடி தாசில்தார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com