

அரசு பஸ் மீது கல்வீச்சு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வள்ளியூர் பணிமனையைச் சேர்ந்த பஸ் ஒன்று நேற்று இரவு 8.30 மணி அளவில் நாகர்கோவில் வடசேரியில் இருந்து வள்ளியூர் நோக்கி புறப்பட்டது. திசையன்விளை சுடலை நகரைச் சேர்ந்த கண்டக்டர் ராஜேந்திரன் (வயது 57) பணியில் இருந்தார்.
அந்த பஸ்சில் ஒழுகினசேரி பகுதியில் ஏறிய 2 பேர் தங்களுக்கு தேரேகால்புதூருக்கு டிக்கெட் வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு கண்டக்டர் இந்த பஸ் தேரேகால்புதூரில் நிற்காது என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால் 2 பேரும், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து கண்டக்டர் ராஜேந்திரன், 2 பேரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டார். பிறகு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டதால் ஆத்திரமடைந்த 2 பேரும் திடீரென கற்களை வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
என்ஜினீயர் கைது
உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து டிரைவரும், கண்டக்டரும் கீழே இறங்கி 2 பேரையும் விரட்டி சென்று அந்த பகுதியில் நின்றவர்களின் உதவியுடன் மடக்கி பிடித்து வடசேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி, சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தேரேகால்புதூர் அருகில் உள்ள சடையான்குளத்தைச் சேர்ந்த சந்திரன் (59), அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் (49) என்பது தெரிய வந்தது. இவர்களில் சந்திரன் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றுவதும், சண்முகவேல் சேலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றுவதும் தெரிய வந்தது.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகாத வார்த்தைகள் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட பஸ்சின் கண்ணாடியின் மதிப்பு ரூ.7500 என போலீசார் தெரிவித்தனர்.