அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி திண்டிவனம் வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த முன்னாள் எம்.பி. உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி
Published on

விழுப்புரம்

திண்டிவனம் அருகே உள்ள எறையானூர் நேதாஜி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேலு மகன் ஜெயபாலன் (வயது 35). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பயிற்சி முடித்துள்ளார்.

இவருக்கு திண்டிவனம் நல்லியகோடான் நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் பழக்கமானார். அவர், ஜெயபாலனிடம் சென்று தனக்கு அரசியல் பிரமுகர்கள் சிலரை நன்கு தெரியும், அவர்கள் மூலமாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.இதை நம்பிய ஜெயபாலன், கண்ணனிடம் தனக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கி தரும்படி கூறியுள்ளார். அதற்கு பணம் செலவாகும் என்று கூறிய கண்ணன், ஜெயபாலனிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.7 லட்சத்தை பெற்றார்.

இந்த பணத்தை முன்னாள் எம்.பி.யான ரித்தீஷிடம் கண்ணன் கொடுத்துள்ளார்.ஆனால் கண்ணனும், ரித்தீசும் ஜெயபாலனுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இருவரிடமும் சென்று தன்னுடைய பணத்தை திருப்பித்தருமாறு ஜெயபாலன் கேட்டதற்கு பணத்தையும் திருப்பித்தராமல் மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து ஜெயபாலன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கண்ணன், ரித்தீஷ் ஆகிய இருவரின் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com