

திருவண்ணாமலை,
இதுபற்றிய விவரம் வருமாறு:-
பட்டதாரி வாலிபர்
வேட்டவலம் அருகே உள்ள இழுப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 27). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், குடியரசு தினவிழாவையொட்டி நேற்று காலை மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை புறவழிசாலையில், 45 கிலோ மீட்டர் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடியே, எழுந்து நின்று கைகளில் 2 தேசிய கொடிகளை ஏந்தியவாறு 2 கிலோ மீட்டர் தூரம் சென்றார். மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் காந்தியின் உருவப்படத்தையும் வைத்திருந்தார். இந்த சாகசத்தை கண்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவரை வெகுவாக பாராட்டினார்கள்.
ஏற்கனவே...
ஏற்கனவே இவர், மோட்டார் சைக்கிளில் எழுந்து நின்றவாறும், மோட்டார் சைக்கிளை கைகளால் பிடிக்காமலும் ஓட்டினார். கடந்த ஆண்டு மோட்டார் சைக்கிளில் எழுந்து நின்று 2 எலுமிச்சை பழங்களை மேலே போட்டு பிடித்தவாறு மோட்டார் சைக்கிளை ஓட்டினார். ஜூலை 11-ந் தேதி சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி மடிக்கணினியில் ஒரு வீட்டின் அமைப்பை வரைந்து காட்டினார். அதைத் தொடர்ந்து ஆகஸ்டு 14-ந்தேதியன்று, தேசியகொடியை கையில் ஏந்தியவாறு நின்றபடி மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
அடுத்ததாக மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி மடிக்கணினியில் 24 அறைகள் கொண்ட மல்டி காம்ப்ளக்ஸ் அமைப்பை வரைபடமாக வரைந்து காட்ட முயற்சி மேற்கொள்ள உள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பல்வேறு சாகசங்கள் செய்து கின்னசில் இடம் பிடிப்பதே தனது லட்சியம் என்றும் தெரிவித்தார்.