கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில்குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி ஹெல்மெட்டுடன் தலை நசுங்கியது

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மாநகராட்சி குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். ஹெல்மெட்டுடன் தலை நசுங்கியது.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில்குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி ஹெல்மெட்டுடன் தலை நசுங்கியது
Published on

ஆலந்தூர்,

சென்னை வடபழனியில் வசித்து வந்தவர் சுதாகர்(வயது 26). நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் தங்கி இருந்து, மணலியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வடபழனிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். கிண்டி கத்திப்பாரா மேம் பாலத்தில் சென்றார். அப்போது அவருக்கு பின்னால் போரூரில் இருந்து வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி அவர் மீது மோதியது.

இதில் சுதாகர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர், ஹெல்மெட் அணிந்து இருந்தும், தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பை லாரி டிரைவரான ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சங்கரை(53) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com