டெங்கு காய்ச்சலை தடுக்க கடும் நடவடிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கு மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
டெங்கு காய்ச்சலை தடுக்க கடும் நடவடிக்கை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கு மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டுபிடிக்கப்பட்டால், சம்மந்தப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என, ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு கொசுக்களை அழிக்கும் பணி நடந்து வருகிறது. பணியாளர்களின் கள ஆய்வின் போது, கொசுப் புழுக்கள் உற்பத்தி கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதித்தல், குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி 35வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமான பணி நடந்து வருகிறது. அங்கு அபாயகரமாக கொசுப்புழு உற்பத்தி கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று கொசுப் புழுக்களின் உற்பத்தி கண்டு பிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு மாநகராட்சி மற்றும் பொது சுகாதார சட்ட விதிகளின் படி ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். குடிநீர் இணைப்பு துண்டிப்பு, காவல் துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் போன்ற தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.மேலும் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள களப்பணியாளர்கள் வீடுகளுக்கு ஆய்வு செய்ய வரும் போது உரிய ஒத்துழைப்பு அளித்து, ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆய்வு செய்ய மறுப்பதும், தடை செய்வதும் சட்டப்படி குற்றம் ஆகும்.

எனவே பொது மக்கள் தங்களது நலத்தையும், சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் நலத்தையும் கருத்தில் கொண்டு டெங்கு காய்ச்சல் இல்லாத நகரமாக நமது தூத்துக்குடி மாநகராட்சியை மாற்ற மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com