

சிக்கமகளூரு
சிருங்கேரியில் கல்லூரியில் விழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போடு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை கல்லூரியின் முன்பு வைத்து சக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி டவுனை சேர்ந்தவர் அபிலாஷ்(வயது 21). இவர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். மேலும் இவர் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பில் உறுப்பினராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5ந் தேதி மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கல்லூரியில் நடந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்த பேச்சாளர் சுளிபைலே சக்கரவர்த்தி என்பவரை சிறப்பு விருந்தினராக அழைக்க ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் முடிவு செய்து இருந்தனர்.
ஆனால் சிறப்பு விருந்தினராக சுளிபைலே சக்கரவர்த்தியை அழைக்க, அந்தப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலரும், கல்லூரியில் உள்ள மற்றொரு மாணவ அமைப்பான எஸ்.என்.என்.யு.ம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நிகழ்ச்சியில் சுளிபைலே சக்கரவர்த்தி கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த 5ந் தேதி நிகழ்ச்சி முடிந்ததும், ஏ.பி.வி.பி.மாணவர் அமைப்பினருக்கும், எஸ்.என்.என்.யு. மாணவர் அமைப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து அறிந்த சிருங்கேரி போலீசார், கல்லூரிக்கு விரைந்து வந்து ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்த அபிலாஷ் உள்பட 4 பேரை பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அபிலாஷ் உள்பட 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கல்லூரியில் ஏற்பட்ட தகராறில் போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததால், அபிலாஷ் மனவருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த அபிலாஷ் கல்லூரியின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து அபிலாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முன்னதாக அவர் சட்டைப்பையில் இருந்து ஒரு உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்ததால், எனது பெற்றோருக்கு அவமானம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று உருக்கமாக அபிலாஷ் எழுதி வைத்து இருந்தார்.
அபிலாஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்த ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினரும், அவரது உறவினர்களும் சிருங்கேரி சிக்கமகளூரு சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் குறித்து அறிந்த சிருங்கேரி போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டம் நடத்தியவர்கள் அபிலாஷ் தற்கொலை செய்ய காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட போலீசாரும், விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் அபிலாசின் தந்தை சன்னப்பாகவுடா சிருங்கேரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எனது மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு கல்லூரி முதல்வர் தேவிதாஸ் நாயக், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நட்ராஜ், ரபீக், ராஜன், குந்தப்பா, சசிகலா, ரேகா, எஸ்.என்.என்.யு. அமைப்பைச் சேர்ந்த கிரண், சிம்பத், அஸ்வத், அஞ்சன், சந்தோஷ், ஆகிய 12 பேர் தான் காரணம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து 12 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.