விளையாட்டுகளின் வரலாறு!

பகடைக்காய், தாயக்கட்டை போன்றவற்றை உருட்டி அதிர்ஷ்டத்தை நம்பி விளையாடும் ஆட்டம் மிக மிகப் பழங்காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது.
விளையாட்டுகளின் வரலாறு!
Published on

காபாரதப் போரே பகடைக்காயால் நிகழ்ந்தது தானே? மரத்தினாலோ, தந்தங்களினாலோ செய்த கனசதுரக் காய்களில் ஒன்று முதல் ஆறு புள்ளிகளைக் குறித்திருப்பார்கள். பண்டைய எகிப்தியர்களின் கல்லறைகளிலும் இம்மாதிரியான காய்கள் காணப்படுவதால், அவர்கள் மத்தியிலும் இந்த ஆட்டம் பிரபலமாக இருந்திருப்பது தெரிகிறது.

இன்றைய ஆக்கியைப் போலவே இங்கிலாந்தில் டியூடர்கள் காலத்தில் ஆடி இருக்கிறார்கள். அதற்கு ஹுரிபாட் என்று பெயர். மட்டைக்குப் பதில் வெறும் கட்டைகளைக் கொண்டு ஆடி இருக்கிறார்கள். நவீன ஆட்டத்தின் விதிமுறைகள், கோல் கம்பங்கள், ஆட்டக்காரர் களின் நிலை போன்றவை விக்டோரிய வம்சத்தினர் ஆக்கி ஆட்டத்தில் ஈடுபாடு காட்டியபிறகு 1875ம் ஆண்டுவாக்கில்தான் உருவாக்கப்பட்டன.

நம்மூர் கண்ணாமூச்சியை மேலைநாட்டினர் வேறுவிதமாக விளையாடுகிறார்கள். அங்கு கண்ணைக் கட்டுவதற்குப் பதிலாக ஒருவரின் தலையை முழுவதுமாக ஒரு தொப்பியால் மூடிவிடுகிறார்கள். அதற்கு ஹிட்மேன் பிளைன்ட் என்று பெயர்.

சைக்கிள் சக்கரத்தையோ, ஒரு கம்பி வளையத்தையோ குச்சியால் தட்டிக்கொண்டு ஓடுவது சிறுவர்கள் பலருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விளையாட்டு. பண்டைக்கால கிரேக்கர்கள் தங்கள் குழந்தைகளை ஓட்டத்தில் சிறந்தவர்களாக்க இந்த வளையம் உருட்டும் விளையாட்டில் ஊக்கப்படுத்தினார்களாம்.

ஓடிப் பிடித்து விளையாடுவது மிக மிகப் பழைய விளையாட்டு. மனிதன் காடுகளில் வசித்தபோதே குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடி இருக்க வேண்டும் என்று விளையாட்டு வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நொண்டி அடித்து தாண்டிக் குதிக்கும் பாண்டி ஆட்டத்துக்கும், ரோமானியர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. மேலை நாட்டவர் இதை ஹாப்ஸ் கேட்ச் என்கிறார்கள். கேட்ச் என்றால் ஸ்கோர் என்று பொருள். இதில் முன்னேறுவதை ஆத்மாவின் வளர்ச்சி என்றும், முடிவை சொர்க்கம் என்றும் குறிப்பிடுவார்கள். நமது பரமபதம் விளையாட்டைப் போல.

பிள்ளையார் பந்து விளையாட்டுப் பற்றித் தெரியுமா? ஒரு கல்லைப் பந்தால் அடித்து வீழ்த்துவது. இதே மாதிரி ஐரோப்பாவில் ஒன்பது கூர் உருளைகளை அடுக்கிவைத்து, எட்டி நின்றபடி ஒரு குச்சியை வீசி அவற்றை வீழ்த்துவார்கள். அதற்கு நைன் பீன்ஸ் என்று பெயர். பதினான்காம் நூற்றாண்டில் பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்கு வந்த ஆட்டம் இது.

நம்மூர் கோலி குண்டு விளையாட்டை பழங்கால ரோமானியர்கள் தீவிரமான விளையாட்டாக விளையாடியிருக்கின்றனர். பெரியவர்களும் குழந்தைகளும் பூமியில் வரையப்பட்ட வட்டத்தினுள் உருண்டையான கூழாங்கற்களைக் கொண்டு அந்த ஆட்டத்தை ஆடினார்கள். பின்னால் சலவைக் கல்லினால் கோலிக்குண்டுகளைச் செய்தார்கள். இன்று கண்ணாடி கோலிகள் வந்துவிட்டன.

மத்திய காலத்தில் பெரியவர்களாலும் சிறுவர், சிறுமியராலும் ஆடப்பட்டது ஒரு வித்தியாசமான விளையாட்டு. அதற்கு, கிளப் பால் (குச்சிப்பந்து) என்று பெயர். 1889ம் ஆண்டுவரை அந்த விளையாட்டு விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. அதன்பிறகு ரவுண்டர்ஸ் என்ற பெயரில் இரு அணிகளாகப் பிரிந்து, புதிய விதிமுறைகளின்படி இதை ஆடத் தொடங்கினார்கள். இன்றைக்கு அமெரிக்காவின் தேசிய விளையாட்டான பேஸ்பால் இதிலிருந்து பிறந்ததுதான்.

குண்டு எறிதல், நவீன தடகள விளையாட்டுகளில் ஒன்று. பதினான்காம் நூற்றாண்டிலேயே இந்த வகை விளையாட்டு மேலைநாடுகளில் ஆடப்பட்டு வந்திருக்கிறது. அக்கால இளைஞர்கள், கனமான கற்களை நீண்ட தூரம் வீசி தங்கள் பலத்தைக் காட்டுவார்களாம்.

நாம் பச்சைக்குதிரை தாண்டுவதை மேலைநாடுகளில் தவளைத் தாவல் என்கிறார்கள். ரோமானியர்களிடம் அது பிரபலமான விளையாட்டாக இருந்திருக்கிறது. குழந்தைகளுக்கு உடல் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்துவதற்காக ரோமானியர்கள் இந்த விளையாட்டை ஆடச் செய்தார்கள்.

அம்மானை ஆட்டம் நமது பழமையான விளையாட்டு என்பது நமக்குத் தெரியும். ஆனால், ஆங்கிலேயர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்களும் இவ்வகை விளையாட்டை விளையாடி இருக்கிறார்கள். ஆதிகால கிரேக்கக் குழந்தைகள், ஆடுகளின் மூட்டு எலும்புகளை தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடியிருக்கிறார்கள்.

பேட்டில்ஸ்டோர், ஷட்டில்காக் ஆகியவை விக்டோரியா காலத்துப் பெண்கள் விரும்பி ஆடிய விளையாட்டுகள். பெண்கள் இந்த விளையாட்டுகளை பாடிக்கொண்டே விளையாடுவார்கள். இந்த விளையாட்டுகள்தான் பிற்காலத்தில் பேட்மிண்டனாக மாறின. வேகமாகவும், வெகு லாவகமாகவும் ஆடப்பட்ட பேட்மிண்டன் விளையாட்டு 1860ம் ஆண்டுவாக்கில் தோன்றியது.

இன்றைக்கும் பிரபலமான விளையாட்டாக உள்ள பூப்பந்து, தமிழ்நாட்டில் தஞ்சை மண்ணில் தோன்றியதாகும். அக்காலத்து அரசகுலப் பெண்கள் இந்த விளையாட்டை விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

சாக்பீசால் வரையப்பட்ட வட்டத்தினுள் நிற்கும் ஒரு தம்பதி, வட்டத்துக்கு வெளியே நிற்கும் தம்பதிகளை, வட்டத்தை விட்டு வெளியே வராமலே பிடிக்க வேண்டும். பலீஞ்சடுகுடு போல. இந்த வகை விளையாட்டு, இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் காலத்தில் பிரபலமானது. வட்டம் நரகம் என்றும், அதிலிருந்து விடுபடுவது வெற்றி என்றும் கருதப்பட்டது.

மதச்சடங்குகளின்போது பலமான சத்தம் எழுப்புவதற்காக கிரேக்கர்கள் ஒரு சுழலும் பொருளைப் பயன்படுத்தினார்கள். அதுதான் தற்போது குழந்தைகள் விளையாடும் பம்பரம். மத்திய காலத்தில்தான் இது குழந்தைகளின் குதூகலமான விளையாட்டாக மாறியது. அக் காலத்திய கிரேக்கர்கள், சுற்றும் பம்பரத்துக்கு சவுக்கடி கொடுத்து அதை ரீங்காரமிட்டு வேகமாகச் சுழலச் செய்வார்கள்.

இன்றைய உலகின் அபிமான விளையாட்டாக இருக்கும் நவீன கால்பந்தின் வயது நூறுக்கும் மேலாகிறது. ஆனால் பழங்காலத்திலேயே கிரேக்கர்களும், ரோமானியர்களும், சீனர்களும் இதைப் போன்ற விளையாட்டை விளையாடி வந்திருக்கின்றனர். 1863ல் இங்கிலாந்தில் முதலாவது கால்பந்துக் கழகம் தோன்றியது.

இன்று நம்மவர் பலருக்கும் விருப்பமாக விளையாட்டாக இருக்கிறது, கிரிக்கெட். தென்கிழக்கு இங்கிலாந்தில் தோன்றிய கிரிக்கெட், 18ம் நூற்றாண்டிலேயே அந்நாட்டின் தேசிய விளையாட்டாகிவிட்டது. 19, 20ம் நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர் ஆதிக்கம் நிறைந்த நாடுகளில் அவ்விளையாட்டு பரவியது. நாடுகளுக்கு இடையிலான சர்வதேசப் போட்டிகள் 1844ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, 1971ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆடப்பட்டது.

நாம் சடுகுடு என்றும் அழைக்கும் கபடி, நம் தமிழகத்தில் பிறந்தது. கபடி என்ற சொல்லே, கை பிடி என்ற தமிழ்ச் சொற்களில் இருந்து உருவானதுதான். இன்றைக்கு கபடி விளையாட்டு ஒரு சர்வதேச விளையாட்டாக வளர்ந்து வருவது நமக்கெல்லாம் பெருமை. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், பீகார், பஞ்சாப் ஆகியவற்றின் மாநில விளையாட்டு கபடி ஆகும். வங்காளதேசத்தின் தேசிய விளையாட்டு கபடிதான்.

சி. பன்னீர்செல்வன், செங்கல்பட்டு.

X

Daily Thanthi
www.dailythanthi.com