

உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் நடுநிலை கல்வி பயிலும் மாணவர்களை இடைநிற்றலில் இருந்து தடுத்து மீண்டும் அவர்களை பள்ளிக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட அலுவலர் கார்த்திகா தலைமையில் அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் தொடக்க மற்றும் உயர்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையில் நின்றவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புகைப்பட்டிகிராமத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஆகியோரை சந்தித்து தங்கள் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மேலும் மாணவர்கள் கல்வி பயில்வதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்தும் பெற்றோரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.