கள்ளக்காதலை கைவிட்டதாக ஏமாற்றியதால் மனைவியை கொன்றேன்; கைதான தொழிலாளி வாக்குமூலம்

கள்ளக்காதலை கைவிட்டதாக கூறி ஏமாற்றியதால் மனைவியை கொலை செய்தேன் என்று கைதான தொழிலாளி வாக்குமூலம் அளித்தார்.
கள்ளக்காதலை கைவிட்டதாக ஏமாற்றியதால் மனைவியை கொன்றேன்; கைதான தொழிலாளி வாக்குமூலம்
Published on

கொலை

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கள்ளப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கல்லுக்குழி அருகில் ஒண்டிகாரன் தோட்டப் பகுதியில் வசித்து வந்தவர் சுதர்சன் (வயது26). கூலி தொழிலாளி. இவரது சொந்த ஊர் ஒடிசா ஆகும். இவருக்கு சத்யா என்கிற ரூனு (23) என்ற மனைவி இருந்தார்.

இந்த நிலையில், சத்யாவுக்கும், அவர்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனை சத்யாவின் கணவர் சுதர்சன் கண்டித்துள்ளார். இந்த நிலையில் சத்யாவும், ரஞ்சித்தும் உல்லாசமாக இருந்ததை அறிந்த சுதர்சன் ஆத்திரம் அடைந்து இருவரையும இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் சத்யா அதே இடத்தில் இறந்தார். ரஞ்சித் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சுதர்சன் தலைமறைவானார். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதர்சனை தேடி வந்தனர்.

மீண்டும் உல்லாசம்

இந்த நிலையில், நேற்று கள்ளப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சுதர்சனை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை சூலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், தனது மனைவி சத்யா பலமுறை சொல்லியும் கேட்காமல், ரஞ்சித் என்பவருடன் கள்ள தொடர்பில் இருந்தார். பிறகு இது குறித்து எச்சரிக்கை செய்த நிலையில் மனம் மாறியது போல் நடித்தார். இதனை நம்பி நான் அவருடன் மீண்டும் குடும்பம் நடத்தினேன். இனிமேல் ரஞ்சித்துடன் தவறு செய்ய மாட்டேன் என்றவர், என்னை ஏமாற்றி மீண்டும் ரஞ்சித்துடன் உல்லாசமாக இருந்ததால் துரோகம் செய்த எனது மனைவியை கொலை செய்தேன் என்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் சுதர்சனை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com