தஞ்சை மாவட்டத்தில் 2¾ லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் 2¾ லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சை காட்டூர்அருகே உள்ள ஒரு வயலில் விளைந்த நெற்பயிர்கள் சேதமடைந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
தஞ்சை காட்டூர்அருகே உள்ள ஒரு வயலில் விளைந்த நெற்பயிர்கள் சேதமடைந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on

தொடர் மழை

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நிவர் புயல், புரெவி புயலால் ஏற்பட்ட மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் நின்ற ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் மழை நின்றதால் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைத்து நெற்பயிர்களை மீட்டெடுக்க விவசாயிகள் முயன்றனர். சிலர், நனைந்த நெற்பயிர்களை அவசரமாக அறுவடை செய்து காய வைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றனர்.

மார்கழி மாதத்தில் மழை பெய்யாது எனவும், அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிரை சிறப்பாக அறுவடை செய்து விடலாம் என விவசாயிகள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அறுவடைக்கு தாயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

நெற்பயிர்கள் பாதிப்பு

மழை நின்றவுடன் தண்ணீரை வடிய வைத்து நெற்பயிரை காப்பாற்றி விடலாம் என நினைத்த விவசாயிகள் தொடர் மழையால் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்த மழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டன. பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் கண்முன்னே அழுகுவதை கண்டு விவசாயிகள் கண்கலங்கியுள்ளனர்.

இது தவிர நிலக்கடலை, எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வேளாண்மைத்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்து அறுவடை செய்தாலும் மகசூல் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் பயிர் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

சுவர் இடிந்து விழுந்தது

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நிலக்கடலை, உளுந்து, எள் போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குடிசை, ஓட்டு வீடுகளின் சுவர்கள் நனைந்து இருப்பதால் ஆங்காங்கே சுவர்கள் இடிந்து விழுகின்றன.

தஞ்சை சீனிவாசபுரம் ராஜராஜசோழன் நகரை சேர்ந்த பன்னீர்செல்வம், குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டின் பின்பக்க சுவர், பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. வீட்டில் யாரும் இல்லை என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

மரம் சாய்ந்தது

தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே பூவரசு மரம் சாய்ந்து, மரக்குதிரை தயாரிக்கும் கடை மீது விழுந்தது. அதன் அருகே மண் சுவரினால் ஆன கட்டிடமும் சேதம் அடைந்தது. தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 7.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

ஈச்சன்விடுதி-90, மதுக்கூர்-63, பட்டுக்கோட்டை-42, நெய்வாசல்தென்பாதி-41, அதிராம்பட்டினம்-35, திருவையாறு-35, ஒரத்தநாடு-27, பேராவூரணி-26, பாபநாசம்-24, அய்யம்பேட்டை-24, தஞ்சை-21, பூதலூர்-20, வல்லம்-14, வெட்டிக்காடு-14, குருங்குளம்-11, கும்பகோணம்-8, திருக்காட்டுப்பள்ளி-5, மஞ்சலாறு-5, திருவிடைமருதூர்-4, கல்லணை-3.

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 277 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

பூதலூர்

பூதலூர் ஒன்றியத்தில் பெய்த மழையால் வெண்டயம்பட்டி கிராமத்தில் ஏரி பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல வீரமரசன்பேட்டை, நந்தவனப்பட்டி பகுதிகளிலும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் பூதலூர் நடுத்தெரு, நான்சி நகர், ஜோதி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்புகளை மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது. நடுத்தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை பொக்லி எந்திரம் கொண்டு

வெளியேற்றப்பட்டது. நேற்று அதிகாலை பெய்த மழையால் அந்தப்பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதேபோல பூதலூர் புதிய பள்ளிவாசல் அருகே உள்ள தெருக்களில் மழையால் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அங்கு உள்ள இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.

நாஞ்சிக்கோட்டை

தஞ்சை அருகே நாஞ்சிகோட்டை பகுதியில் மழை பெய்ததால் அதிநாம்பட்டு கிராமத்தில் உள்ள மாமுண்டி ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் 100 ஏக்கரில் நெற்பயிர்கள், நிலக்கடலை, உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தகவலறிந்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் சத்யராஜ், பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் திலீபன், தஞ்சாவூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் பலர் சம்பவ இடத்திற்கு வந்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சரி செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com