

கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோரை நியமித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
இவர்கள் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக 1,110 படுக்கைகள் வசதிகள் அமைக்கப்பட்டு வருவதை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கூடுதல் படுக்கைகள்
இதுகுறித்து அமைச்சர்கள் கூறும்போது:-
மாவட்டத்தில் தற்போது அரசு மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகள் கொடிசியா, பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட 8 கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள், மேலும், 62 தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் 10 தனியார் தங்கும் விடுதிகளிலும் கெரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படுவதையொட்டி கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 260 படுக்கைகள், சரவணம்பட்டி குமரகுரு பொறியியல் கல்லூரியில் கூடுதலாக 360 படுக்கை வசதிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரி தங்கும் விடுதியில் 490 படுக்கைகள் என 3 இடங்களில் மொத்தம் 1,110 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.