குடும்பத் தகராறில் மனைவிக்கு கத்திக்குத்து கூலித்தொழிலாளி கைது

வியாசர்பாடியில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத் தகராறில் மனைவிக்கு கத்திக்குத்து கூலித்தொழிலாளி கைது
Published on

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி கென்னடி நகரில் வசித்து வருபவர் பாண்டியன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வீரம்மாள் (வயது 37). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

பாண்டியனுக்கு குடிப் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், பாண்டியன் மனைவியை சந்தேகப்பட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாண்டியன் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். நள்ளிரவில் வழக்கம்போல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன், கத்தியால் மனைவி வீரம்மாளின் இடுப்பு மற்றும் கை பகுதியில் சரமாரியாக குத்தினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த வீரம்மாளை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த வியாசர்பாடி போலீசார், மனைவியை கத்தியால் குத்தியதாக பாண்டியனை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com