

ஆலோசனை கூட்டம்
கூடலூர் நகரில் 1,200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. மக்களின் தேவைக்கு அதிகமாகவே ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. மேலும் கூடலூர் நகர பகுதியில் ஆட்டோக்கள் உள்பட வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் நாள்தோறும் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்குவதாக டிரைவர்கள் சங்கங்கள் புகார் தெரிவித்து வருகிறது.
இதனால் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்டு உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வகையில் கூடலூர் ஜானகியம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்க தலைவர் முருகானந்தகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முரளி, கண்ணன், சிவா என்ற சிவசெல்வன், துயில் மேகம், ஹரிகிருஷ்ணன், ஸ்ரீதர், பாபு, மணி உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், அத்திப்பாளி, 2-வது மைல், மேல்கூடலூர், ராஜகோபாலபுரம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
6-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம்
கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் இணைந்து செயல்படுவது, இதற்காக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். சமவெளி பகுதியில் 30 கி.மீட்டர் தூரமும், மலைப்பிரதேசத்தில் 15 கி.மீட்டர் தூரம் வரை ஆட்டோக்களை இயக்கி கொள்ளலாம் என்ற அரசின் விதிமுறைகளை முறையாக செயல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் விலை, காப்பீடு தொகை அதிகரிப்பால் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் கூடலூர் பகுதியில் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் தாலுகா அளவில் அனைத்து ஆட்டோ டிரைவர்களும் வருகிற 6-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறும் போது, ஏற்கனவே அதிக ஆட்டோக்கள் ஓடுவதால் அதை நிறுத்துவதற்கு இடநெருக்கடி, மேலும் பயணிகள் சவாரி கிடைக்காததால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கூடுதலாக ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்குவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனர்.