

நாகர்கோவில்,
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை முடிவடைந்து தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதாகவும், தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தக்கலை, குலசேகரம், மணலோடை, கோதையாறு, திற்பரப்பு மற்றும் அணை பகுதிகள், மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நாகர்கோவிலை பொறுத்த வரையில் காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்ய வில்லை. இந்த நிலையில் மதியம் 12.30 மணி அளவில் பயங்கரமான இடி மின்னல் ஏற்பட்டது. இதுபோல் 2 மணி அளவிலும் ஏற்பட்டது. மின்னல் தாக்கிய தில் நாகராஜா கோவில் வளாகத்தில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுபற்றி உடனே நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் தென்னை மரத்தில் எரிந்த தீயை வீரர்களால் அணைக்க முடியவில்லை.
தென்னை மரம் கோவிலில் பூஜைசெய்யும் போற்றி வீட்டுக்கு எதிரே உள்ளது. அதற்கு முன் அம்மன் மற்றும் முருகன் சன்னதி இருக்கிறது. வீட்டுக்கும், சன்னதிக்கும் இடையே காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு உள்ளது.
இதனால் தீயணைப்பு வீரர்களால் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் குழாய்களை உள்ளே எடுத்துச் செல்ல முடியவில்லை. எனவே தென்னை மரத்தில் எரியும் தீயை அணைக்க வேறு வழி உள்ளதா? என்று தீயணைப்பு வீரர்கள் ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக மதியம் 2.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. அதைத் தொடர்ந்து மழை நீரில் தீ தானாகவே அணைந்துவிட்டது. அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கேப் ரோடு, கே.பி. ரோடு, கோர்ட்டு ரோடு, அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மழை காரணமாக பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன் உள்ள சாலையில் தண்ணீர் வடிந்தோட சற்று நேரம் ஆனது. இதனால் அந்த சாலையில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பீச்ரோட்டில் இருந்து செட்டிகுளம் வரும் சாலை மற்றும் நாகராஜா கோவில் முன் இருந்து அவ்வை சண்முகம் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை ஆகியவற்றில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்தும் சாலை சீரமைக்கப்படாததால் அங்கு சகதியாக காட்சி அளித்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.