

திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 27). பெயிண்டர். இவர் தனது உறவினரான காஞ்சீபுரம் மாவட்டம் கடப்பாக்கத்தை சேர்ந்த பார்வதி (25) என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. போதிய வருமானம் இல்லாத சுதாகர், பார்வதியை தாய் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும், ரொக்கப்பணம் வரதட்சணையாக வாங்கி வரும்படி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த பார்வதி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தியதாக சுதாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.