கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

எட்டயபுரம் தாலுகாவில் முழுமையான இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி உதவி கலெகடர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை.
கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
Published on

கோவில்பட்டி

எட்டயபுரம் தாலுகாவில் பயிர் காப்பீடு செய்யவும், முழுமையான இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி உதவி கலெகடர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் தாலுகாக்களில் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி பயறு, மக்காச்சோளம், கம்பு போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டனர். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், பயிர்கள் தண்ணீரின்றி கருகின. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு பெறும் வகையில், கூட்டுறவு வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்து வருகின்றனர்.

பயிர்களை வருகிற 15ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் காப்பீடு செய்யலாம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்தபோது, வருகிற 22ந்தேதி வரையிலும் பயிர்களுக்கு காப்பீடு பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கூட்டுறவு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி முடிந்து விட்டதாக கூறி, பிரீமியம் வாங்க மறுத்து வருகின்றனர். இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பயிர் காப்பீடு செய்ய கூட்டுறவு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, விவசாயிகள் தலையில் முக்காடு போட்டவாறு, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் வரதராஜன், பெருமாள்சாமி, ராமராஜ், காளிராஜன், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறிது நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். பின்னர், பயிர் காப்பீடு செய்ய ஆவண செய்யுமாறு வலியுறுத்தி உதவி கலெக்டர் டாக்டர் கண்ணபிரானிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் டாக்டர் கண்ணபிரான், உடனடியாக கூட்டுறவு அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகளை அலுவலகத்துக்கு வரவழைத்தார். விவசாயிகளிடம் உரிய பிரீமியத்தொகை பெற்று பயிர் காப்பீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோன்று பாரதீய கிசான் சங்கத்தினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் உதவி கலெக்டரிடம் அவர்கள் கோரிக்கை மனு வழங்கினர். அதில், மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் மழையின்றி கருகி விட்டன. வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி முழுமையான அளவில் நடைபெறவில்லை.

மானாவாரி பயிர்களில் 33 சதவீத இழப்புக்கு ரூ.3 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இது போதுமானது அல்ல. எனவே 100 சதவீதம் பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அடுத்தடுத்து விவசாயிகள் நடத்திய முற்றுகை போராட்டத்தால் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com