மாதவரத்தில் மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி 2 பேர் பலி

மாதவரத்தில் மோட்டார்சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியதில் ஆந்திர மாநில அரசு ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மாதவரத்தில் மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி 2 பேர் பலி
Published on

செங்குன்றம்,

ஆந்திர மாநிலம் சத்தியவேடு கொமட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா(வயது 24). ஆந்திர மாநில அரசு ஊழியர். இவருடைய தாயார் நாகபூஷணம் என்பவருக்கு சர்க்கரைநோய் என்பதால் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாதம்தோறும் மாத்திரை வாங்குவது வழக்கம்.

இதற்காக நேற்று காலை சத்தியவேட்டில் இருந்து தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வேலு(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாத்திரை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை வேலு ஓட்டினார். அவருக்கு பின்னால் சூர்யா அமர்ந்து இருந்தார். மாதவரம்-மூலக்கடை நெடுஞ்சாலையில் மாதவரம் பணிமனை அருகே சென்றபோது மணலியில் இருந்து மாதவரம் கொசப்பூர் நோக்கி வந்த டேங்கர் லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த சூர்யா, வேலு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவரான கொடுங்கையூர் எம்.ஆர். நகரைச் சேர்ந்த நாகராஜ்(39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com