பெரியகுளத்தில் பரபரப்பு: திருவள்ளுவர் சிலை அவமதிப்பு - பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. இதனை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தில் பரபரப்பு: திருவள்ளுவர் சிலை அவமதிப்பு - பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

பெரியகுளம்,

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் சமீபத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் சிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தேனி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி வேட்டி மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தேனி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜபாண்டியன் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று அங்கு வந்தனர். அப்போது, திருவள்ளுவர் சிலையில் சாணம் வீசப்பட்டு அவமதித்திருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பாரதீய ஜனதா கட்சியினர், திருவள்ளுவர் சிலையை தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து பாலாபிஷேகம் செய்தனர். மேலும் சிலைக்கு மாலை அணிவித்து, தேங்காய், பழங்களை வைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர். சிலை அவமதிப்பை கண்டித்தும், இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கோபிகண்ணன், நகர செயலாளர் மோடிசஞ்சீவி, நிர்வாகிகள் ராமானுஜம், வினோத், வீரபத்திரன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.

சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com