ராயபுரத்தில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

ராயபுரத்தில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். திருட முயன்றபோது அவர் பலியானாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ராயபுரத்தில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
Published on

திருவொற்றியூர்,

ராயபுரம் மாரியம்மன் தெருவில் வசித்து வருபவர் வீரையன் (வயது 56). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனக்கு சொந்தமான 2 மாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் 2-வது மாடியில் தூங்கிக்கொண்டு இருந்தார். நள்ளிரவில் இவரது வீட்டின் 2-வது மாடியில் இருந்து மர்மநபர் கீழே குதிக்கும் சத்தம் கேட்டது.

உடனே அவர் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதுகுறித்து ராயபுரம் போலீசாருக்கு வீரையன் தகவல் கொடுத்தார். போலீசார் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ பணியாளர்கள், கீழே விழுந்தவரை பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிணமாக கிடந்தவர் அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்து இருந்தார். அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். திருட வந்தபோது, 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பலியானாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com