மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும் மர்ம விலங்கு சிறுத்தையா? 4 கூண்டுகள் வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை

மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும் மர்ம விலங்கு சிறுத்தை? என பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும் மர்ம விலங்கு சிறுத்தையா? 4 கூண்டுகள் வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை
Published on

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும் மர்ம விலங்கு சிறுத்தை? என பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் 4 கூண்டுகள் வைத்துள்ளனர்.

ஊருக்குள் புகுந்த மர்ம விலங்கு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். இதனால், காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து சுற்றும் சம்பவம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணவாளக்குறிச்சி பகுதியில் ஊருக்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று பிள்ளையார்கோவிலை சேர்ந்த சிலுவைமுத்து (வயது 63) என்பவர் வீட்டின் முன்பு கட்டியிருந்த 2 ஆடுகளை கடித்து கொன்றது. இதனையடுத்து அந்த மர்ம விலங்கின் கால் தடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மர்ம விலங்கின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த மறுநாளே, ஆண்டார்விளையில் உள்ள ஒரு வீட்டில் 9 கிலோ எடையுள்ள வான் கோழியை மர்ம விலங்கு கடித்து குதறியது. உடலின் பாதியை தின்றதும், மீதி பாதியை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளது.

அட்டகாசம்

அன்றைய தினம் இரவு நேசமணி என்பவர் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளின் அபய குரல் சத்தம் கேட்டது. உடனே அவர் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது, மர்ம விலங்கு ஒன்று தப்பி ஓடியதை பார்த்துள்ளார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மர்ம விலங்கு ஒன்று முயலை விரட்டி சென்றதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்த னர். மேலும் அந்த விலங்கு சிறுத்தையை போன்று இருந்ததாக கூறியுள்ளனர். இதனால் அங்கு பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. எனவே, அட்டகாசத்தில் ஈடுபடும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

கூண்டு வைத்து பிடிக்க...

இதையடுத்து வனத்துறையினர் மர்ம விலங்கை கூண்டு வைத்து பிடிக்க முடிவெடுத்தனர். அதன்படி இரவோடு, இரவாக மணவாளக்குறிச்சி பகுதியில் 4 கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்த இடத்தை நேற்று மாலை வனத்துறையினர் வேளிமலை மணிமாறன், புஷ்பராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த மர்ம விலங்கை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டில் ஒரு ஆடை அடைத்து விடிய, விடிய தோப்புக்குள் காத்திருந்தனர். ஆனால் கூண்டில் மர்ம விலங்கு சிக்கவில்லை. கூண்டில் மர்ம விலங்கு சிக்கிய பின் தான் அது எந்த வகை விலங்கு என தெரிய வரும். ஏற்கனவே கொரோனாவால் நிம்மதி இழந்துள்ள பொதுமக்கள், ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் மர்ம விலங்கால் மேலும் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com