தர்மபுரியில் கொளுத்தும் கோடை வெயில்: சாலையோரங்களில் நுங்கு விற்பனை விறுவிறுப்பு

கொளுத்தும் கோடை வெயில் காரணமாக தர்மபுரி நகரில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது.
தர்மபுரியில் கொளுத்தும் கோடை வெயில்: சாலையோரங்களில் நுங்கு விற்பனை விறுவிறுப்பு
Published on

தர்மபுரி,

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயில் அளவு 100 டிகிரியை தொட்டது. வெயில் கொளுத்துவதால் பகல் நேரத்தில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

இந்த நிலையில் வெயிலால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தணிக்க நீர்மோர், பழரசம் ஆகியவற்றை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் பழக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தர்மபுரி நகரில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை தற்போது விறுவிறுப்படைந்து உள்ளது. தர்மபுரி நெசவாளர் நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் நுங்கு விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் சேலம் மாவட்ட மேச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தர்மபுரி நகருக்கு நுங்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த ஆண்டு 3 நுங்கு ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைவு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பால் ஒரு நுங்கு ரூ.5 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக நுங்கு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com