கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்

ஆண்டிப்பட்டி அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிணற்றில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. நேற்று இவருடைய தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் மிதந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பிணத்தை மீட்டனர். இறந்தவர் வெள்ளை வேட்டி-சட்டை அணிந்திருந்தார்.

அவர் 40 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்து, கிணற்றில் உடலை வீசி சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று அதிகாலை நேரத்தில் சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் வந்து பார்வையிட்டார். பின்பு இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com