திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆன்மிக ஸ்தலங்களில் பக்தர்கள் சாமி தாசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆன்மிக ஸ்தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6.41 மணி அளவில் பவுர்ணமி தொடங்கி மறுநாள் இரவு 8.45 மணி அளவில் நிறைவடைகிறது.

இந்த பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம் என்று பொதுமக்கள், பக்கதர்கள் மிகவும் ஆர்வமாகவும், எதிர்பார்ப்பிலும் இருந்தனர். ஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதாலும், பாதுகாப்பு கருதியும் பவுர்ணமியன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com