வேலூர் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 139 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 6,270 ஆக உயர்ந்தது

வேலூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 139 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,270 ஆக உயர்ந்தது.
வேலூர் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 139 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 6,270 ஆக உயர்ந்தது
Published on

வேலூர்,

வேலூர் ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசார் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆண், பெண் போலீசாருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் சிலரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடைய குடும்பத்தினர், உடன் பணிபுரிந்த போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வேலூர் கொணவட்டத்தில் உள்ள 3 ஷூ கம்பெனிகளில் பணிபுரியும் 400 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகளில் நேற்று முன்தினம் 49 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் உள்பட 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று தெரிய வந்தது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை ஊழியர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

அதைத்தவிர அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர், 2 ஜெயில் காவலர்கள், வேலூர் மாநகராட்சி பகுதியில் கடை வைத்துள்ள 4 வியாபாரிகள், வேலூர் சத்துவாச்சாரியில் 84 வயது மூதாட்டி, 90 வயது முதியவர் உள்பட 13 பேரும், மாநகராட்சி பகுதியில் 81 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 139 பேர் ஒரேநாளில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 6,270 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com