மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Published on

மேட்டூர்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஒரு சில மாதங்களிலேயே தமிழகத்தில் பருவ மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்தது.

இதனால் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்ட நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் கடந்த மாதம் 13-ந் தேதி இரவு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதைத்தொடர்ந்து அணைக்கு வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காவிரி டெல்டா பாசனத்துக்கு மீண்டும் தண்ணீர் தேவை ஏற்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் தேவை மேலும் அதிகரித்ததன் காரணமாக நேற்று காலை முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 178 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரத்து 600 கனஅடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்று முன்தினம் வரை 120 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 119.64. அடியாக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com