

பெரம்பலூர்,
அரியலூர் இடையத்தான்குடி, ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து மாணவர் களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை பள்ளியிலும், ஊரிலும் நட்டனர்.
தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி வளர்ச்சி செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சி நிலைகளை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் போட்டிகளில் வெற்றி, பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.
இதேபோல் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினம் விழா கொண்டாடப்பட்டது. அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் அறிவழகன் தலைமை தாங்கினார். முன்னாள் ராணுவவீரர் முருகேசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தா.பழூர் ஒன்றிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் விக்கிரமங்கலம் பள்ளி அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்ததை பாராட்டி மாணவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வினோத்கண்ணன், சாமித்துரை ஆகியோர் பதக்கத்தை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற இலக்கியப்போட்டிகள், அறிவியல் மன்ற கண்காட்சி மற்றும் சமூக அறிவியல் மன்ற கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகம் பரிசுகளாக வழங்கப்பட்டன. 10, 11, 12 -ம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களையும், பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களையும் பாராட்டி பெற்றோர் ஆசிரியர்கழகத்தால் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதையடுத்து நாட்டுப்பற்றை வலியுறுத்தும் நாடகங்கள், ஆடல், பாடல், மாணவர்களின் உரைகள் என கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் சாந்தி தேசிய கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி, பெற்ற மாணவர்களுக்கு சமூக ஆர்வலர் சுப்ரியா வெங்கடேசன் பரிசுகள் வழங்கினார்.
இதேபோல் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சாந்தி தேசிய கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மகாகவி பாரதியாரின் மாறுவேடமிட்டு வந்தே மாதரம் என்ற பாடலை பாடிய முத்துக்குமாருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் இளவழகனுக்கு தமிழக அரசு கனவு ஆசிரியர் விருது மற்றும் புதுமை பள்ளி விருது பெற்றமைக்காக, பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். தமிழக அரசிடம் இருந்து கனவு ஆசிரியர் விருதுக்காக பெற்ற பரிசு தொகை ரூ.10 ஆயிரத்தை பள்ளியின் வளர்ச்சிக்காக பெற்றோர் ஆசிரிய கழக தலைவரிடம் இளவழகன் வழங்கினார். குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.