

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், ஊர்க்காவல்படை வீரர்கள், சாரணர் இயக்கம், தேசியப சுமைப்படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
இதனைத்தொடர்ந்து கலெக்டர் சமாதான புறாக்களை பறக்கவிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் உள்பட 8 பேருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். 2015-ம் ஆண்டில் படைவீரர் கொடி நாள் நிதி வசூலில் அதிகம் வசூல் செய்தமைக்காக மாவட்ட வருவாய் அதிகாரிக்கு பாராட்டு சான்றிதழையும், மேலும் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 16 போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் 8 பேருக்கு நற்சான்றிதழ்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 16 அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்பட்டோர், ஆதிதிராவிடர், சமூக நலத்துறைகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ உள்பட பல்வேறு அரசுதிட்டங்கள் வாயிலாக பயனாளிகள் 174 பேருக்கு ரூ.89 லட்சத்து 72 ஆயிரத்து 416 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேசப்பற்று நடனம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மேள தாள நிகழ்ச்சி உள்பட வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற 170 பேருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி சான்றிதழ், பரிசுகளையும் வழங்கினார். இதேபோல் கம்பத்தில் மாணவர்கள் செய்த சாகசம் கைத்தட்டலை பெற்றது.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஸ்ரீதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை மற்றும் சட்டப்பணிகள் துறை சார்பில், மாவட்ட செசன்சு நீதிபதி பாலராஜமாணிக்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட குற்றவியல் நீதிபதி முரளிதரன், சார்பு நீதிபதிகள் ஸ்ரீஜா, வினோதா, மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி மோகனப்பிரியா மற்றும் குற்றவியல், உரிமையியல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.