

ஓமலூர்
பேட்டி
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்துக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அங்கு அவர் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்பட 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முக்கிய பதவிகளை கைப்பற்றுவோம்.
பா.ஜனதா தனித்து போட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் அவரவர் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என விருப்பப்படுவது வழக்கம் தான். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தேர்தலில் குறைந்த அளவிற்கே வாய்ப்பு வழங்க முடியும்.
உள்ளாட்சி தேர்தலில் நிறைய பேருக்கு வாய்ப்பு வழங்கக்கூடிய சூழலில் கட்சியினர் அதிக அளவில் போட்டியிட வேண்டும் என ஒவ்வொரு கட்சியினரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்குமே இந்த சிரமம் உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் பா.ஜனதாவுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உடன்பாடு ஏற்படவில்லை.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜனதா வெளியேறுகிறது என்ற தவறான வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அந்த கட்சியினருக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இணைந்து செயல்படுவோம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரிந்து போட்டியிட்டாலும், தேசிய அரசியலில் எப்போதுமே நாட்டின் நலன் கருதி எல்லா கட்சியுமே தேசிய கட்சியுடன் இணைந்து தான் போட்டியிடுகிறது. அதன்அடிப்படையில் தேசிய அரசியலில் அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் இணைந்து செயல்படும். அப்போது தான் தமிழகம் வளர்ச்சி பெறும். மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.
எங்கள் குழந்தை எங்களுக்கு முக்கியம். அவரவர் குழந்தை அவரவருக்கு முக்கியம். கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு, கட்சியினர் குழந்தை போன்றவர்கள். அவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை இல்லை
கடந்த 8 மாத கால தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. மக்கள் பட்ட துன்பமே அதிகம். முதல்-அமைச்சரை பொறுத்தவரை அவரை அவரே புகழ்ந்து கொள்கிறார். சைக்கிளில் செல்வது, நடைப்பயணம் செல்வது, இதுதான் அவருடைய அன்றாட பணியாக இருக்கிறது. நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.
தற்போது தி.மு.க. ஆட்சியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காண்பிக்கிறார்கள். கொத்துக்கொத்தாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் எங்கள் ஆட்சியில் செய்தது போன்று தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.
தரமற்ற பொருட்கள்
தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் கொலை, கொள்ளை, திருட்டு குறித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்யும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. சர்வாதிகார முறையில் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை. 21 பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் 16 பொருட்கள் வரை மட்டுமே அதுவும் தரமின்றி வழங்கப்பட்டுள்ளது. இதை யாராலும் மறைக்க முடியாது.
பொங்கலை உற்சாகமாக கொண்டாட நினைத்த பொதுமக்களை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. மக்களின் வயிற்றில் அடித்து விட்டது. பொங்கல் தொகுப்பு வழங்க தொடங்கிய உடனே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். அப்போதே விசாரணை நடத்தி இருந்தால் வெறும் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் உண்மை வெளிவந்து இருக்கும். ஆனால் நான் அறிக்கை வெளியிட்டு 17 நாட்கள் கடந்த பின்னர் சம்பிரதாயத்திற்காக விசாரணை நடத்துவோம் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் எந்த உண்மையும் வெளிவராது.
அமோக வெற்றி பெறும்
நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வினருக்கு எதிராக தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். இதனுடன் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது.
8 மாத கால ஆட்சியில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் தி.மு.க. அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். எனவே நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின் போது ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. மணி, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.