மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அறிவிக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளை 30 நாட்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அறிவிக்க தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வாகனங்களை விடுவிக்கக்கோரி, அவற்றின் உரிமையாளர்கள் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.

இந்த வழக்குகளில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:

மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக மணல் கடத்தல் தொடர்பாக விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை அரசு அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவில்லை.

எனவே இன்னும் ஒரு மாதத்தில் மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுகளை அமைப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கோர்ட்டே தாமாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கையை எடுக்கும்.

மணல் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட வாகனங்களை விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்த பல்வேறு மனுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை அபராதம் விதித்து, அதை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையை அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, மனுக்களை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com