சரவர திறக்கப்படாத ரே‌ஷன் கடைகள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

மானாமதுரை பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகள் சரிவர திறக்கப்படாததால் பொதுமக்கள் கடை முன்பு எப்போது திறப்பார்கள் என்று மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.
சரவர திறக்கப்படாத ரே‌ஷன் கடைகள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் பொதுமக்கள்
Published on

மானாமதுரை,

மானாமதுரை பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் சரிவர திறக்கப்படாததால் பொதுமக்கள் கடை முன்பு எப்போது திறப்பார்கள் என்று மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.

மானாமதுரை ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமப்புற மக்களின் வசதிக்காக ரேஷன் கடைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இலவசமாக 20 கிலோ அரிசி, சீனி, மைதா, எண்ணை, பருப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. பொருட்கள் வழங்கியவுடன் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கிராமப்புற மக்களிடம் செல்போன்கள் இல்லை. இருந்தாலும் அவர்களில் சிலரால் செல்போனில் வரும் தகவல்களை படிக்க முடியவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கிராமப்புற ரேஷன் கடைகளில் பொருட்களை பொதுமக்களுக்கு சரிவர வழங்குவதில்லை. இதனை கேட்டால் ரேஷன் கடை ஊழியர்கள் மிரட்டுவதாக கூறப்படுகிறது. இன்னும் சில ஊர்களில் ரேஷன் கடைகள் சரிவர திறக்கப்படுவது கிடையாது. தங்களது விருப்பத்திற்கு ஏற்ற நேரத்தில் ஊழியர்கள் கடைகளை திறக்கின்றனர். இதனால் ரேஷன் கடைகள் முன்பு பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.

இதேபோல் மானாமதுரை அருகே உள்ள சின்னகண்ணணூர் ரேஷன் கடையில் பொருட்களை எடை குறைத்து போடுவதுடன் உரிய நேரத்தில் கடை திறப்பதில்லை என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். அரிசியை வழங்காமலேயே வழங்கியதாக குடும்ப அட்டைகளில் பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ஊழியரை இடமாற்றம் செய்வதாக அறிவித்தனர். ஆனால் நேற்று வரை அவரை இடமாற்றம் செய்யவில்லை. பகல் 12 மணி வரை கடை திறக்கப்படவில்லை. காலை 8 மணியில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக கிராமமக்கள் காத்து கிடந்தனர்.

கிராமமக்கள் கூறியபோது, விற்பனையாளர் பொருட்களை சரிவர கொடுப்பதில்லை. இதனை கேட்டால் தகராறு செய்வதாக கூறி புகார் அளிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். எனவே கடை ஊழியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர். வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, விற்பனையாளர் மீது கிராமமக்கள் குற்றம் சாட்டியதையடுத்து அவரை அருகில் உள்ள அரிமண்டபம் கடைக்கு இடமாற்றம் செய்ய போவதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com