

ஈரோடு
சிறுமியை திருமணம் செய்தவருக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
பாலியல் சில்மிஷம்
சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளி ஆண்டிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் தர்மராஜ் (வயது 35). விவசாயி. இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி, அந்தியூர் எண்ணமங்கலத்தில் உள்ள செலம்பூர் அம்மன் கோவிலில் வைத்து, 15 வயது சிறுமியை இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
இதைத்தொடர்ந்து தர்மராஜ் சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கிருந்து வெளியேறி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்ததை தெரிவித்து உள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் இதுபற்றி பவானி மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது
அதன்பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி, குழந்தை திருமண தடை சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தர்மராஜை கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் சிறுமியின் தாய், தர்மராஜின் பெற்றோர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
3 ஆண்டு சிறை
இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றவாளி தர்மராஜுக்கு குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் போக்சோ வழக்கின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக தர்மராஜ் வழங்க வேண்டும் எனவும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
6 பேர் விடுதலை
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி மாலதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.