ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நடத்த அனுமதிக்க கோரி கரூரில் நண்பர்கள் அமைப்பினர் ஊர்வலம்
கரூர்,
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. எனவே தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசு உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஊர்வலம்
அதன்படி கரூர் மாவட்ட நண்பர்கள் அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நடத்த அனுமதிக்க கோரி நேற்று கரூரில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் திண்ணப்பா கார்னர், ஜவகர் பஜார் வழியாக பஸ் நிலைய ரவுண்டானாவில் முடிவடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சேவல், காளை மாடு, மாட்டு வண்டி, நாய் ஆகியவற்றை அழைத்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

