

திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் கோவில் தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட் டது. முன்னதாக காளியம்மன் கோவிலிலிருந்து சீர்வரிசை எடுத்துவரப்பட்டது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. இதில் திருச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 450-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் கண்டிராதித்தத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45), ரெட்டிபாளையத்தை சேர்ந்த ராஜேஷ் (35), பூண்டியை சேர்ந்த பழனியப்பா (20), தவுத்தாய் குளத்தை சேர்ந்த சதீஸ்குமார் (35) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சதீஸ்குமார் உள்பட 3 பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், கட்டில், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருமானூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், சாத்தமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.