

திருவாரூர்,
திருவாரூரில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நகர கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் சித்தமல்லி சோம சுந்தரம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மதிவாணன் (கீழ்வேளூர்), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), ஆடலரசன் (திருத்துறைப்பூண்டி), மாவட்ட துணை செயலாளர்கள் கார்த்திக், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நல உதவிகள்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது ஆண்டு சட்டமன்ற வைர விழாவில் திரளாக பங்கேற்பது. பிறந்த நாள் விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்குவதுடன், ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்குவது. மாவட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தொகுதியான திருவாரூர், மன்னார்குடி பகுதியில் காப்பீடு தொகை பல பகுதிகளில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர் பாலு, பொதுக்குழு உறுப்பினர் தியாகபாரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட சிறுப்பான்மை நலப்பிரிவு அமைப்பாளர் தாஜிதீன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தேசபந்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் புலிவலம்தேவா வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் வாரைபிரகாஷ் நன்றி கூறினார்.