கரூரில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவிட்ட வடமாநில வாலிபர் கைது

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவிட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவிட்ட வடமாநில வாலிபர் கைது
Published on

கரூர்,

இந்தியா முழுவதும் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம், பதிவிறக்கம் செய்வதையும், பரப்புவதையும் தடுக்க காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கரூரில் ஒருவரது செல்போனிலிருந்து குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் முகநூல் (பேஸ்புக்) மூலம் பரப்பப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்ற காணாமல்போன மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் (என்.சி.எம்.இ.சி) சார்பில் மின்னஞ்சல் மூலமாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கரூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம், அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது, அது கரூர்-கோவை ரோடு வையாபுரி நகரில் இயங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்று விசாரித்தபோது, அந்த செல்போன் எண்ணை வடமாநில வாலிபர் ஒருவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் இருந்ததையும், அவற்றை முகநூலில் பதிவிட்டு, பகிரப்பட்டதையும் போலீசார் உறுதிப்படுத்தினர். தொடர் விசாரணையில் அந்த நபர், உத்தரபிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டம், பிலாஸ்பூர் கச்சனலை சேர்ந்த ஜமால் அகமது மகன் நியாஸ்அலி (வயது 23) என்பதும், வையாபுரி நகரில் அறை எடுத்து தங்கி அங்கு ஒரு வணிக வளாக கட்டிடத்தில் இயங்குகிற சலூன் கடையில் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் (போக்சோ) உள்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் நியாஸ்அலி மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் எந்தெந்த வழிகளில் பரப்பப்பட்டுள்ளன? அதில் பெண்கள் யாரும் இருக்கின்றனரா? பாலியல் குற்றச்செயலில் ஏதும் ஈடுபட்டு வருகின்றனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நியாஸ் அலியின் முகநூல் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் அவர்களில் ஆபாச வீடியோக்களை பரப்பி வருபவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியை கரூர் டவுன் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதையடுத்து இதில் மேலும் சிலர் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நியாஸ் அலி நேற்று இரவு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com