

பெங்களூரு:
பிணமாக கிடந்தார்
பெங்களூரு எம்.வி. கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் மினுஷ்(வயது 17). கடந்த சில தினங்களுக்கு முன்பு மினுசுக்கும், அவரது நண்பர்கள் சிலருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மினுஷ் வெளியே சென்று இருந்தார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை எம்.வி.கார்டன் பகுதியில் ஒரு இடத்தில் மினுஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மினுசின் குடும்பத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற குடும்பத்தினர் மினுசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
கழுத்தை அறுத்து கொலை
இதற்கிடையே அங்கு வந்த அல்சூர் போலீசார் மினுசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மினுஷ் கத்தியால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் மினுசை அவரது நண்பர்கள் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து அல்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மினுசின் நண்பர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.