

ரெட்டிச்சாவடி,
கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளிப்பட்டு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 5 ஏரிகள் 2 குளங்கள் உள்ளன. இந்த ஏரிகள் மற்றும் குளங்களை ஆண்டுதோறும் மீன்வளர்த்து விற்பனை செய்ய ஏலம் விடப்படும். அதனை ஏலம் மூலம் குத்தகைக்கு எடுப்பவர்கள், மீனை வளர்த்து விற்பனை செய்வார்கள்.
அவ்வாறு ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, ஊராட்சிக்குட்பட்ட தெருவிளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளிட்ட ஊர் பராமரிப்பு செலவுக்காகவும், கோவில் திருவிழா நடத்துவதற்காகவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால், ஏரி மற்றும் குளங்கள் குத்தகைக்கு ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் நேற்று ஏலம் நடத்துவதாக தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஏரிகள் மற்றும் குளங்களை ஏலம் விடுவதற்காக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜகாங்கீர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்தனர். இதுபற்றி அறிந்ததும் கிராம மக்கள் திரண்டு வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூக்கணாம்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு சார்பில் ஏலம் விடப்பட்டால் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்ய முடியாது. ஏலம் விடும் தொகையை முழுவதுமாக கிராமத்துக்கு செலவிடுவதாக இருந்தால், ஏலம் நடத்த ஒத்துழைக்கிறோம் என்றனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கூறுகிறோம் என்றனர். ஆனால் இதனை கிராம மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஏலம்விடும் தேதியை குறிப்பிடாமல், அதனை ஒத்திவைத்து கிராம மக்கள் அங்கிருந்து அதிகாரிகள் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.