கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 226 பேர் பலி 2017-ம் ஆண்டை விட குறைவு

கரூர் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 226 பேர் உயிரிழந்துள்ளனர். இது விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2017-ஐ விட குறைந்துள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 226 பேர் பலி 2017-ம் ஆண்டை விட குறைவு
Published on

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நகை-பணம் உள்ளிட்டவைகள் குறித்தும் மற்றும் வழக்கு விவரங்கள் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் நேற்று அவரது அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் 2018-ல் நடந்த கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக 222 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 209 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 398 பவுன் நகைகள், ரூ.41 லட்சத்து 97 ஆயிரத்து 30 மதிப்பிலான ரொக்கம், நான்கு சக்கர கனரக வாகனங்கள் 5, இரு சக்கர வகனங்கள் 61 ஆகியவை குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் 94 சதவீத குற்ற வழக்குகளில் துப்பு துலங்கப்பட்டிருக்கிறது. அதில் 86 சதவீதம் களவு போன சொத்துக்கள் மீட்கப்பட்டன. மேலும் குற்றங்கள் தொடர்பாக கரூர் கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதிலும் துரிதமாக மாவட்ட போலீஸ்துறையினர் பங்காற்றியுள்ளனர். அதில் பாலியல் பலாத்கார வழக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கு, கொலை வழக்கு உள்ளிட்டவற்றில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை, 10 ஆண்டு சிறை தண்டனை ஆகியவை கோர்ட்டு வழங்கியிருக்கிறது.

வாகன விபத்துகள் தொடர்பாக 1,070 வழக்குகள் 2018-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. விபத்தில் 226 பேர் இறந்திருக்கின்றனர். 1,185 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் கடந்த 2017-ல் 1,094 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 339 பேர் விபத்தில் இறந்திருப்பதும், 1,234 பேர் காயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டை விட 2018-ல் உயிரிழப்பினை ஏற்படுத்தும் வகையிலான விபத்துகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஆறுதலான விஷயம் ஆகும். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக இயக்குதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல் உள்ளிட்ட வாகன விதிகளை மீறுவதினாலேயே விபத்துகள் நிகழ்கின்றன.

அந்த வகையில் 2018-ல் வாகனவிதிகளை மீறியதாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து ரூ.1 கோடியே 59 லட்சத்து 16 ஆயிரத்து 122 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2017-ல் 1 லட்சத்து 93 ஆயிரம் வாகனவிதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் ரூ.2 கோடி வரையில் அபாரதம் வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் விதிகளை மீறியதாக 2018-ம் ஆண்டில் போலீஸ்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டதில் 9,682 பேருக்கு ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். இதை தவிர 21,279 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வருகிற 2019-ம் ஆண்டில் பல்வேறு விழிப்புணர்வினை ஏற்படுத்தியும், சட்டரீதியான நடவடிக்கை எடுத்தும் விபத்துக்களை தடுப்போம்.

மணல் திருட்டு, மதுபான விற்பனை உள்ளிட்ட குற்றசெயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த 9 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பணியில் இறந்த காவலர்களின் 5 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கரூர் மாவட்ட வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அதிகாரியாக பணி வழங்கப்பட்டிருக்கிறது. கொலை செய்யப்பட்டு இறந்தவரது குடும்பத்தினருக்கும், கிணறு வெட்டும்போது திடீரென இறந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின்கீழ் இழப்பீடு தொகை வாங்கி கொடுக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கைகள் வரும் காலங்களிலும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பாரதி, கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்மொழிஅரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com