தனியார் தொலைக்காட்சி நிருபருக்கு அரிவாள் வெட்டு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

தனியார் தொலைக்காட்சி நிருபர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாத்தான்குளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் தொலைக்காட்சி நிருபருக்கு அரிவாள் வெட்டு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Published on

சாத்தான்குளம்,

தனியார் தொலைக்காட்சி நிருபர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாத்தான்குளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குகளை சரிவர விசாரிப்பதில்லை என்றும், வக்கீல்களை மதிப்பதில்லை என்றும் சாத்தான்குளத்தை சேர்ந்த வக்கீல் ஜேசுதுரை என்பவர் உயர் அதிகாரிகளுக்கு இணையதளம் மூலம் புகார் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சாத்தான்குளம் கோர்ட்டில் வக்கீல் ஜேசுதுரையிடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தகராறு செய்து அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி, அதை கண்டித்து வக்கீல்கள் கடந்த 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான செய்திகளை தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழியை சேர்ந்த பாலிமர் தொலைக்காட்சி நிருபர் முத்துவேல் (வயது 34) ஒளிபரப்பு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துவேல் சாத்தான்குளத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது தட்டார்மடத்தை சேர்ந்த சண்முகநாதன் (54) என்பவர் அங்கு வந்து, இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் பற்றி செய்தி ஒளிபரப்பு செய்ததை கண்டித்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முத்துவேல் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சாலை மறியல்

இதை கண்டித்து நேற்று காலையில் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சுந்தர், பேச்சாளர் தமிழ்குட்டி, மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்வானன், தங்கதமிழன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்கள், நிருபர் முத்துவேலை அரிவாளால் வெட்ட காரணமாக இருந்த தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரனை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதனை அறிந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பழனிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சாலை மறியல் செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இதனையடுத்து தட்டார்மடம் போலீசார் நிருபர் முத்துவேலை அரிவாளால் வெட்டிய சண்முகநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் கஜேந்திரனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com